
சன் டிவியில் ஒளிபரப்பாகும் ‘எதிர்நீச்சல்’ சீரியலுக்கு இல்லத்தரசிகள் மத்தியில் அமோக வரவேற்பு இருக்கிறது. 90ஸ் பேவரைட் ‘கோலகங்கள்’ சீரியல் இயக்குனர் திருச்செல்வம் இயக்கத்தில் வெளிவந்த எதிர்நீச்சல் சீரியல், டி.ஆர். பி ரேட்டிங்கில் முதல் இடத்தை தக்க வைத்து வருகிறது. அதற்கு முக்கிய காரணமாக இருந்தது நடிகர் மாரிமுத்துவின் ரோல் தான். ஏனெனில், இவர் ஏற்று நடித்த ஆதி குணசேகரன் எனும் கதாபாத்திரம், அவ்வளவு வலிமை மிக்கது. அந்த அளவிற்கு, எதிர்நீச்சல் சீரியலில் இவரின் ஆதி குணசேகரன் என்னும் கதாபாத்திரம் பட்டி தொட்டி எங்கும் பேசப்பட்டது.

கதைக்களம்:
திருமணத்திற்கு பிறகு ஆணாதிக்கம் படைத்த குடும்பத்தில் மாட்டிக்கொண்டு கொடுமை அனுபவிக்கும் படித்த பெண்கள், அதில் இருந்து வெளியே வர எடுக்கும் முயற்சியே எதிர்நீச்சல் சீரியலின் மையக்கருவாகும். இந்த சீரியலில் பெண்களை அடுப்படியில் முடக்கி போட்டு வீட்டு வேலை செய்ய வைக்கும் ஆணாதிக்கம் செலுத்தும் நபராக ஆதி குணசேகரன் கதாபாத்திரம் அமைத்திருக்கும். வீட்டில் எடுக்கும், எல்லா முடிவுகளிலும் இவரின் தலையீடு நிச்சயம் இருக்கும்.

ஏம்மா ஏய், இந்தம்மா…வசனம்:
தன்னுடைய நடை, உடை பாவனை என அனைத்திலும், ஏம்மா ஏய், இந்தம்மா போன்ற வசனங்களிலும் பெண்களை அடிமைப்படுத்தி ஆணாதிக்கம் செலுத்தும் நபரின் கதாபாத்திரத்தில், ஆதி குணசேகரனாக வாழ்ந்தவர் மாரிமுத்து. இவரை சீரியலில் திட்டி தீர்க்காத இல்லத்தரசிகளே கிடையாது. மொத்தத்தில், வெள்ளித்திரையில் நடித்து புகழ்பெறும் நடிகர்கள், வில்லன்களை போல், சின்னத்திரையில் ஆதி குணசேகரன் என்னும் கதாபாத்திரத்தை மக்கள் கொண்டாடி தீர்த்தனர்.
இந்த நிலையில், இவர் சமீபத்தில் மாரடைப்பு காரணமாக திடீரென உயிரிழந்தார். இவருடைய இறப்பு ஒட்டுமொத்த தமிழகத்தையும், எதிர்நீச்சல் ரசிகர்களையும் உலுக்கி போட்டது. இதையடுத்து, சீரியலில் ஆதி குணசேகரன் கதாபாத்திரம் இல்லாததால் எதிர்நீச்சல் கதைக்களம் அப்படியே மாறியது.

இருப்பினும், இயக்குனர் திருச்செல்வம் வழக்கம் போல் பரபரப்பிற்கு பஞ்சம் இல்லாமல் இந்த தொடரை கொண்டு செல்கிறார். மாரிமுத்துவின் இறப்பிற்கு பிறகு யாரை அந்த கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க போகிறார்கள் என்கின்ற கேள்வி எழுந்தது. இதற்காக தயாரிப்பு நிறுவனம் பசுபதி, ராதாரவி மற்றும் வேல் ராமமூர்த்தி உள்ளிட்ட சில பிரபலங்களை நடிக்க வைக்க, பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. இந்த நிலையில், தற்போது ஆதி குணசேகரனாக நடிக்க போவது யார் என்ற உறுதியாக தகவல் வெளிவந்துள்ளது. அதன்படி, மாரிமுத்துவின் நெருங்கிய நண்பரான வேல ராமமூர்த்தி தான் அடுத்த ஆதி குணசேகரனாக சீரியலில் நடிக்கிறாராம்.

இது தொடர்பாக, இன்று வெளியான ப்ரோமோவில் வேல ராமமூர்த்தியின் முகம் காண்பிக்கவில்லை என்றாலும், அவர்தான் தான் அடுத்த ஆதி குணசேகரன் என்பது பார்க்கும் போதே தெள்ளத்தெளிவாக தெரிகிறது. எழுத்தாளரும், நடிகருமான இவர் சேதுபதி, கிடாரி, கொம்பன், ரஜினிமுருகன் உள்ளிட்ட படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து புகழ்பெற்றவர். விரைவில் ஆதி குணசேகரனாக வரும் வேல ராமமூர்த்தியின் என்ட்ரி எப்படி இருக்க போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.