சூரியனும், சந்திரனும் தன்னுடைய சொந்த வீடான கடக ராசியில் ஒரே நேர்கோட்டில் இணையும் நாளை நாம் அமாவாசை என்கின்றோம். இந்த நாட்களில் நம்முடைய முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது மிகவும் விசேஷமாக கருதப்படுகிறது. கணவர் இல்லாத பெண்களும் இந்த விரதத்தை மேற்கொள்ள வேண்டும்.
தை அமாவாசை:
ஒவ்வொரு மாதமும் அமாவாசை வரும் என்றாலும், இந்த தை மாதத்தில் வரும் அமாவாசை மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்றாகும். புரட்டாசியில் வரும் மகாளய அமாவாசை அன்று, நமது முன்னோர்கள் பித்ருலோகத்தில் இருந்து நம்மைக் காண பூமிக்கு வருவதாக ஐதீகம். தை மாதத்தில் வரும் அமாவாசை, நமது முன்னோர்கள் நமக்கு ஆசி வழங்கி விட்டு, மீண்டும் பித்ருலோகத்திற்கு செல்லும் நாளாகக் கருதப்படுகிறது. இந்த வருடம் முதல் தை அமாவாசை இன்று நிகழ்கிறது.
தர்ப்பணம் கொடுக்க சரியான நேரம், காலம்!
இன்று தர்ப்பணம் கொடுக்கும் போது நேரம், காலம் முக்கியமான ஒன்றாகும். பொதுவான சூரியன் உதித்த பிறகு தான் தர்ப்பணம் கொடுக்க வேண்டும். அதேபோன்று, உச்சி காலத்திற்கு பிறகு தர்ப்பணம் கொடுக்கக் கூடாது. பொதுவாக, சூரிய உதயத்திற்கு முன்பு வரும், பிரம்ம முகூர்த்தத்தில் தர்ப்பணம் கொடுப்பது புண்ணியமாகும். ராகு காலம், எம கண்ட நேரம் தவிர்த்து மற்ற நேரங்களில் தர்ப்பணம் கொடுக்கலாம். அதன்படி, இந்த 2024 ஆம் ஆண்டின் முதல் தை அமாவாசை (இன்று) பிப்ரவரி 09ஆம் தேதி வெள்ளிக்கிழமை வருகிறது. அன்றைய தினம் நம்முடைய முன்னோர்களுக்கு திதி கொடுக்க நல்ல நேரம் காலை 9:30 மணிக்கு துவங்கி 10: 30 மணிக்கு முடிவடையும். அமாவாசை திதியானது காலை 08.05 மணிக்கு துவங்கி, பிப்ரவரி 10, 2024 அன்று அதிகாலை 4:28 மணிக்கு முடிவடையும்.
முன்னோர்களை நினைத்து வழிபடுவது:
இந்த நாட்களில் நம்முடைய முன்னோர்களை நினைத்து எள்ளும், தண்ணீரும் இரைத்து வழிபடுவது வழக்கம். ஏனெனில், இந்த நாட்களில் தான் நம்முடைய முன்னோர்கள் பித்ரு லோகத்தில் இருந்து பூமிக்கு நேரடியாக வருவதாக நம்பப்படுகிறது. எனவே, இந்த நாட்களில் முன்னோர்களுக்கு திதி, தர்பணம் கொடுப்பது அவர்களிடம் ஆசி பெறுவதற்கு நம்மை நேரடியாக கொண்டு சேர்க்கும். இதன்மூலம், நம்முடைய தீராத பாவங்கள் மற்றும் சாபங்களை நாம் விடுவித்து கொள்ளலாம். இது ஒவ்வொரு அமாவாசை அன்றும் செய்யலாம். அப்படி தர்ப்பணம் கொடுப்பார்கள் நீர் நிலைகள், ஆறு நதிக்கரைகளில் கொடுப்பது மிகவும் விசேஷமானது.
தானத்தில் சிறந்த தானம் அன்னதானம்:
நம்முடைய பித்ருக்களுக்கு திதி கொடுக்கும் போது, தானத்தில் சிறந்த தானம் அன்னதானம் வழங்கலாம். ஏழைகளுக்கு உணவு, உடை, பணம் போன்றவற்றையும் தானம் செய்யலாம். இதனால் உங்களுக்கும், உங்கள் குடும்பத்திற்கும் புண்ணியம் வந்து சேரும். வாழ்வில் அனைத்து செல்வங்களும் சேரும். மகிழ்ச்சியான வாழ்கை அமையும். வீட்டில் சுப காரியங்கள் நடைபெறும். மேலும், பித்ருக்களின் முழு ஆசிர்வாதமும் உங்களுக்கு கிடைக்கும்.