Beauty Tips For Face: நாம் நம்முடைய அழகை பராமரிப்பதில் என்னதான், கூடுதல் கவனம் செலுத்தினாலும், கால நிலை மாற்றம் காரணமாக முகத்தில் பருக்கள், உதடுகளில் வெடிப்பு, வாய் புண் போன்றவை வருவது தவிர்க்க முடியாத ஒன்றாகும். இவற்றை தவிர்க்க, நாம் என்னதான் விதவிதமான கெமிக்கல் கலந்து பொருட்களை வாங்கி பயன்படுத்தி பார்த்தாலும், தீர்வு என்பது அவ்வளவு எளிதில் கிடைக்காது. சில நேரம் இது போன்ற கெமிக்கல் கலந்த பொருட்களை, உடல் ஏற்றுக் கொள்ளாமல் வலி, அரிப்பை ஏற்படுத்தும். குறிப்பாக, முகப்பருக்கள் வந்தாலே சருமத்தின் எல்லா பகுதிகளிலும் விரைவில் பரவும். அதுனாலே, முகப்பருவின் மீது அடிக்கடி கை வைத்து கிள்ளி விடக்கூடாது என்பார்கள். எனவே, இவற்றிலிருந்து முற்றிலும் விடுபட நாம் சில பயன் தரும் குறிப்புகளை தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும்.
சருமத்திற்கு ஏற்ப பொருட்களை வாங்கி பயன்படுத்துங்கள்:
உங்களின் சருமம் எண்ணெய் பிசுக்கு உடையாத..? வறண்டதா..? என்பதை தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். ஏனெனில், உங்கள் சருமத்திற்கு ஏற்ப சரியான பொருட்களை தேர்வு செய்து பயன்படுத்த வேண்டும். அப்போது தான் உங்கள் சருமம் பளபளப்பு தன்மையுடன், முகப்பரு வராமல் தடுக்கும்.
ரசாயனம் கலந்த மேக்கப் பொருட்கள்:
முகத்தில் பருக்கள் வருவதற்கு முக்கிய காரணமாக இருப்பது, அதிக அளவு ரசாயனம் கலந்த பொருட்களை முகத்திற்கு பயன்படுத்துவது ஆகும். இது தவிர மேக்கப் நீண்ட நேரம் முகத்தில் இருக்கும் போது, முகத்திற்கு ஆக்ஸிஜன் கிடைக்காமல் பருக்கள் வர ஆரம்பிக்கும்.
முகத்தில் போட்டுள்ள மேக்கப்பை நீக்க வைப்ஸ் பயன்படுத்த வேண்டும், அதன்பிறகு ஏதேனும் ஒரு பேஸ் வாஷ் பொருட்களை பயன்படுத்த வேண்டும். இது முகத்தில் இருக்கும் அனைத்து விதமான கெமிக்கல்களையும் நீக்க உதவுகிறது.
உடற்பயிற்சி:
முறையான உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும். இது உடல் ஆரோக்கியத்தையும், நீண்ட ஆயுளையும் அதிகரிக்க செய்யும். மேலும், உடலில் இருக்கும் கெட்ட வேர்வை துளிகளை வெளியேற்றி, முகத்தில் இருக்கும் எண்ணெய் பிசுக்கு, முகப்பருக்களை நீக்கி பாதுகாப்பு தருகிறது.
உணவு:
உணவு விஷயத்தை பொறுத்த வரை மிகவும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். ஆம், தினசரி நாம் உண்ணும் உணவில், காய்கறிகள், பழங்கள் நிறைந்த புரதம், கார்போஹைட்ரேட்டுகள், கொழுப்புகள் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். இவை உங்கள் சருமம், பளபளப்புடன் இருக்க உதவும்.
நல்ல தூக்கம்:
சரியான தூக்கம் இல்லையென்றால், பல்வேறு உடல் ஆரோக்கிய குறைபாடுகள் ஏற்படும். நல்ல தூக்கம் தான் ஒருவரது ஆரோக்கியமான வாழ்க்கைக்கு துணைபுரிகிறது. தினமும் இரவில் சரியாக 6 முதல் 8 மணி நேரம் தூக்கம் அவசியமாகும். இவை உங்கள் முகத்திற்கு புது பொலிவு பெறுவதற்கு உதவியாக இருக்கும்.