Bigg Boss 7 Tamil Contestants List: சின்னத்திரை ரசிகர்களின் ஆல் டைம் ஃபேவரைட் நிகழ்ச்சியான பிக்பாஸ், நெதர்லாந் நாட்டின் ”பிக் பிரதர்” நிகழ்ச்சியை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டது. இது இந்தியாவில் 15 ஆண்டுகளுக்கு முன்பு, முதன் முதலில் ஹிந்தியில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியை முதலில் ஹிந்தி நடிகர் சல்மான் கான் தொகுத்து வழங்கினார். அதனை தொடர்ந்து, தெலுங்கு, கன்னடம், தமிழ், மலையாளம் என்று பல மொழிகளில் நடத்தப்பட்டு மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்தது.
தமிழில் கடந்த 2017 -ஆம் ஆண்டு, முதல் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியை உலக நாயகன் கமல்ஹாசன், தொகுத்து வழங்க முதல் சீசனே சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. குறிப்பாக, கமல்ஹாசன் வருகை தரும் வார இறுதி நாட்களில் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் டி.ஆர்.பி ரேட்டிங் உச்சத்தில் இருக்கும். தற்போது, தமிழில் மட்டுமல்ல இந்தியா முழுவதிலும் நம்பர் 1 தொலைக்காட்சி நிகழ்ச்சியாக பிக்பாஸ் இடம்பெற்றுள்ளது.
தமிழில் இதுவரை ஒளிபரப்பான 6 சீசன்களின் வெற்றியை தொடர்ந்து, வருகிற அக்டோபர் 1-ந் தேதி முதல் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் தொடங்க உள்ளது. வழக்கம்போல் இந்த சீசனையும் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்க உள்ளார். மற்ற எல்லா சீசன்களை விட, இந்த சீசனில் நிறைய புதுமையான விஷயங்களை கொண்டு வந்திருக்கிறார்கள். குறிப்பாக, இதில் இரண்டு வீடு இருக்க போவது உறுதியாகியுள்ளது. அதனால், இந்த முறை இரண்டு பிக் பாஸ் குரல் ஒலிக்கப் போகிறதாம். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் போட்டியாளர்கள் எல்லாம் குறுகிய காலத்தில் பட்டி தொட்டி எல்லாம் பிரபலம் அடைந்து விடுவார்கள். அதனால் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள பலரும் ஆர்வம் காட்டுவார்கள்.
பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்க இன்னும் இரண்டு நாட்களே இருப்பதால், போட்டியாளர்கள் யார் என்கின்ற எதிர்பார்த்து பிக் பாஸ் ரசிகர்கள் மத்தியில் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது. இதன் அதிகாரப்பூர்வமான தகவல் இன்னும் வெளியாகவில்லை என்றாலும், கலந்து கொள்வது யார் யார் என்கின்ற தகவல்கள் அவ்வப்போது கசிந்த வண்ணம் உள்ளது.
அதன்படி, விஜய் டிவியின் செல்ல பிள்ளை தொகுப்பாளர் மாகாபா ஆனந்த், பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகர் குமரன், குக் வித் கோமாளி பிரபலம் ரவீனா, நடிகர் ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா, நடிகை நடிகர் பப்லு பிரித்விராஜ், கவர்ச்சி நடிகை தர்ஷா குப்தா, ’90’ஸ் கிட்ஸ் பேவரைட் பாய் அப்பாஸ், கோவையை சேர்ந்த பெண் பஸ் ஓட்டுநர் ஷர்மிளா, நடிகை ரேகா நாயர் ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.
இந்த நிலையில், பிக் பாஸ் சீசன் 3ல் பங்கேற்ற வனிதா விஜயகுமார், பிக்பாஸ் நிகழ்ச்சியில் மறக்கவே முடியாத போட்டியாளர்களில் ஒருவராக இடம்பிடித்தவர். அவரை தொடர்ந்து, 18 வயது நிறைந்த அவரின் மூத்த மகள் ஜோவிகா விஜயகுமார் வரவிருக்கும் பிக் பாஸ் 7 நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக கலந்து கொள்ள இருக்கிறார். இவர், அம்மாவிடம் கற்றுக்கொண்ட யுக்திகளை மனதில் கொண்டு சுவாரஸ்யத்திற்கு பஞ்சம் இல்லாமல் நிகழ்ச்சியை கொண்டு செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இவர்களை தொடர்ந்து, சின்னத்திரை நடிகை ரவீனா தாஹா, உமா ரியாஸ், பாலிமர் செய்தி வாசிப்பாளர் ரஞ்சித், விஜே ஜாக்குலின், விஜே பார்வதி, உள்ளிட்ட இன்னும் சிலரும் இணைய இருக்கிறார்களாம். பிக் பாஸ் நிகழ்ச்சி துவங்க இன்னும் இரண்டு நாட்களே இருப்பதால் உறுதியாக கலந்து கொள்வது யாரெல்லாம் என்பதை நாம் பொறுத்திருந்து பார்ப்போம்.