Chandramukhi 2:கடந்த 2005ஆம் ஆண்டு பி.வாசு இயக்கத்தில் ரஜினிகாந்த, ஜோதிகா, பிரபு, நயன்தார ஆகியோரின் நடிப்பில் வெளியான சந்திரமுகி திரைப்படம் உலக அளவில் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. அந்த படத்தில் வேட்டையன் ரோலில் நடித்த ரஜினிகாந்தையும், சந்திரமுகி ரோலில் நடித்திருக்கும் ஜோதிகாவையும் அவ்வளவு எளிதில் யாரும் மறந்துவிட முடியாது. அந்த படத்தில் நடித்தற்காக ஜோதிகாவிற்கு தமிழக அரசின் சிறந்த நடிகை என்ற விருதும், கலைமாமணி விருதும் கிடைத்தது. கூடவே, வடிவேலுவின் காமெடி காட்சிகளும், வித்யாசாகரின் இசையும் படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்தது.
வித்யாசாகர் இசையில் பென்னி கிருஷ்ணகுமார், திப்பு ஆகியோர் சேர்ந்து பாடிய ”ரா ரா ..சரசக்கு ரா ரா ” பாடல் பட்டி தொட்டி எல்லாம் பரவி பிரபலம் ஆனது. இந்த நிலையில், 17 ஆண்டுகள் கழித்து ராகவா லாரன்ஸ், கங்கனா ரணாவத் நடிப்பில் மீண்டும் உருவாகியுள்ள சந்திரமுகி 2 திரையரங்குகளில் நேற்று முன்தினம் வெளியானது. முதல் படத்தை இயக்கிய பி.வாசுதான் இந்த படத்தையும் இயக்கியுள்ளார். இதில் ராதிகா சரத்குமார், வடிவேலு, லக்ஷ்மி மேனன், மஹிமா நம்பியார் உள்ளிட்ட பல்வேறு நட்சித்திர பட்டாளமே நடித்துள்ளது. சந்திரமுகியின் முதல் பாகத்தை போல் லாரன்ஸ், வடிவேலு காம்போவில் படத்தின் காமெடி காட்சிகள் இடம்பெற்றுள்ளது.
இப்படம் துவங்கியதில் இருந்தே, பல்வேறு சிக்கல்களை சந்தித்தது. முதலில் இந்த படத்தை தயாரிப்பதாக இருந்த சன் பிக்சர்ஸ் நிறுவனம் , மறுப்பு தெரிவிக்க படத்தை தயாரிக்க லைகா நிறுவனம் ஒப்புக்கொண்டது. அதேபோல், ஜோதிகாவின் கதாபாத்திரத்திற்கு காஜல், சிம்ரன் என்று பல்வேறு நடிகைகளின் பேச்சுவார்த்தைக்கு பிறகு இறுதியாக கங்கனா ரனாவத் கமிட் ஆனார். இதையடுத்து, செப்டம்பர் 15-ந் தேதி படம் வெளியாக இருந்த நிலையில், போஸ்ட் புரொடக்ஷன் வேலை நிறைவடையாத காரணத்தால் வெளியீடு தேதி ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து, மிகுந்த எதிர்பார்ப்பிற்கு மத்தியில் சந்திரமுகி 2 திரைப்படம் ஒருவழியாக செப்டம்பர் 28-ம் தேதி வெளியானது.
முதல் பாகத்தின் காட்சிகளை அப்படியே ரீமேக் செய்து வைத்துள்ளார்கள் என்று படத்திற்கு கலவையான விமர்சனம் இருந்தாலும் கூட, திரைக்கதை விறுவிறுப்பாக செல்வதால் சந்திரமுகி 2 படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அதன்படி, ரூ. 60 கோடி பட்ஜெட்டில் தயாரான இப்படம் வெளியான நாள் முத,ல் நல்ல வசூல் வேட்டை நடத்தி வருகிறது. இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளையும் சேர்த்து முதல் நாளில் மட்டும் ரூ 7.5 கோடி வசூல் செய்ததாக தகவல் வெளியானது. அதேபோல், சந்திரமுகி 2 திரைப்படம் உலகளவில் ரூ. 13 கோடிக்கும் மேல் வசூல் செய்திருந்தது.
இந்த நிலையில், இரண்டாம் நாளே சந்திரமுகி 2 படம் உலகம் முழுவதும் ரூ. 20 கோடி வரை வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், தமிழத்தில் இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்ததால் இந்திய அளவில் சுமார் 12 கோடிக்கும் அதிகமாக வசூல் வேட்டை நடத்தியுள்ளதாம். அதேபோல், இனி வரும் விடுமுறை நாட்களில் சந்திரமுகி 2 திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் புதிய வசூல் சாதனையை படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் படக்குழுவினர் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.