இன்றைய காலத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை, கொலஸ்ட்ரால் பிரச்சனையை எதிர்கொண்டு வருகிறார்கள். இதற்கு வாழ்கை முறை மாற்றம், உடல் உழைப்பு இல்லாமை, உணவு பழக்கவழக்கம் மற்றும் மது அருந்துதல் போன்றவை முக்கிய காரணமாக அமைந்துள்ளது. அதிக கொலஸ்ட்ரால் பிரச்சனை இருந்தால், தமனிகளில் ஏற்படும் கொழுப்புகளின் அடைப்பால், இதயத்திற்கு செல்லும் இரத்த ஓட்டம் தடைபடுகிறது.
இதனால், சில சமயம் ஒருவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிர் இழப்பை ஏற்படுத்தும் அபாயம் இருக்கிறது. இவை பெரும்பாலும், உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு போன்ற இணை நோயாளிகளுக்கு எளிதில் ஏற்படும் அபாயம் இருக்கிறது. ஒருவருக்கு கொலஸ்ட்ரால் பிரச்சனை அதிகரிப்பு, ரத்த பரிசோதனை மூலம் கண்டறியப்படுகிறது. இதனை தவிர்த்து ஒரு சில அறிகுறிகளை வைத்தும் அதிக கொலஸ்ட்ரால் பிரச்சனை இருப்பதை கண்டறியலாம். அவை என்னென்ன அறிகுறிகள் என்பதை நாம் இந்த பதிவின் மூலம் பார்த்து தெரிந்து கொள்வோம்.
அதிக கொலஸ்ட்ரால் ஒருவருக்கு இருந்தால், பாதங்கள் அல்லது குதிங்காலில் ஏற்படும் புண்கள் நீண்ட நாட்களுக்கு பிறகும் குணமடையாமல் இருக்கும். காலில் போதுமான அளவு ரத்த ஓட்டம் இல்லாதது இதற்கு முக்கிய காரணமாக உள்ளது.
ஒருவருக்கு அதிக கொலஸ்ட்ரால் இருந்தால், தோலில் போதுமான ரத்த ஓட்டம் இல்லாமல் சருமத்தில் வறட்சி ஏற்படுகிறது. நீங்கள் நீண்ட நேரம் நின்று கொண்டு வேலை செய்தால், கால்களின் தோல் வெளிர் நிறமாக மாறும். ஒரு சிலருக்கு கண்களுக்கு கீழே நீல நிறத்தில் கோடுகள் காணப்படும்.
தோலில் அலர்ஜி காரணமாக தடிப்பு ஏற்படுவது அதிக கொலஸ்டராலின் அறிகுறியாக கருதப்படுகிறது. மேலும், இது நீலம் அல்லது ஊதா நிறத்தில் இருக்கும்.
அதேபோன்று, கண்களின் மூலையைச் சுற்றி மஞ்சள் கலந்த ஆரஞ்சு நிற மெழுகு வளர்ச்சி இருக்கும்.
கொலஸ்ட்ரால் அளவை கட்டுக்குள் வைக்கும் உணவுகள்:
கொலஸ்ட்ரால் அளவை கட்டுக்குள் வைத்துக் கொள்ள பால் சார்ந்த பொருட்கள், பேக்கரி ஸ்னாக்ஸ், சிவப்பு இறைச்சி, குக்கீஸ் போன்ற அதிக கொழுப்பு சார்ந்த உணவு பொருட்களை தவிர்த்தல் நல்லது.
இதற்கு பதிலாக நீங்கள் நார்ச்சத்து நிறைந்த ஓட்ஸ், முளைகட்டிய உணவு பொருட்கள், சால்மன் மீன், ஒமேகா 3 நிறைந்த ஆளி விதைகள் மற்றும் ஆப்பிள் போன்ற உணவு பொருட்களை சேர்த்துக் கொள்ள வேண்டும்.