இந்த மாதம் முழுவதும் பகல் நேரத்தில் வெயில் சுட்டெரித்து வருகிறது. அதே நேரத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக இரவு வேளையில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. குளிர் காலங்களில் சளி, இருமல் பாதிப்பு ஏற்படுவது இயல்பான ஒன்றுதான். ஆனால், திடீரென ஏற்படும் இந்த பருவநிலை மாற்றம் காரணமாக ஏற்படும் சளி, இருமலை சமாளிப்பது சற்று கடினமாக ஒன்றாகும். குறிப்பாக, குழந்தைகள் மற்றும் பெரியவர்களை இந்த நேரத்தில் கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும்.
பருவநிலை மாற்றம் காரணமாக சளி, இருமல் தொண்டை வலி போன்றவை ஏற்படும்.
அவற்றில் இருந்து விடுபட, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வெதுவெதுப்பான உப்பு நீரில் வாய் கொப்பளிக்க வேண்டும். பூண்டுப் பற்களை நெய்யில் வறுத்து சாப்பிட வேண்டும். துளசி இலைகளை மென்று சாப்பிட வேண்டும்.
இஞ்சி, பூண்டு தட்டி போட்டு கஷாயம் வைத்து குடிக்க வேண்டும். இரவில் 1 டீஸ்பூன் வெந்தயம் ஊற வைத்து காலையில் குடிப்பது நல்லது.
சூடான பாலில் மஞ்சள், மிளகு சேர்த்து பருக வேண்டும். இஞ்சியில் உப்பு சேர்த்து நன்கு மென்று சாப்பிட வேண்டும். கருமிளகு டீ குடிப்பது தொண்டை வலியை குறைக்கும். குறிப்பாக தண்ணீரை சூடாக்கி குடிக்க வேண்டும்.
இஞ்சி மற்றும் துளசி ஆகியவற்றை சாறு பிழிந்து எடுத்துக் கொள்ளுங்கள். அவற்றில் 1 டீஸ்பூன் தேன் கலந்து பருகினால் உடல் நன்கு ஆரோக்கியமாக இருக்கும். வாரத்திற்கு இரண்டு முறை கொள்ளு ரசம், மிளகு ரசம் வைத்துக் குடிக்க வேண்டும். தினமும் காலையில் இஞ்சி டீ, சுக்கு டீ பருகுவது நல்லது.
தேனில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் தொண்டை வலியை குணப்படுத்தும் ஆற்றல் கொண்டது. மேலும், அதிமதுரம் கஷாயம் எடுத்துக் கொள்வது தொண்டையை இதமாக வைக்கும்.
தவிர்க்க வேண்டியவை:
உடலுக்கு குளிர்ச்சியை உண்டாக்கும், தயிர், பழங்கள், இனிப்பு உணவுகளை கட்டாயம் தவிர்க்க வேண்டும்.
தூக்கம்:
இரவில் 8 மணி நேரம் தூக்கம் அவசியம் ஆகும். இரவில் நீண்ட நேரம் விழித்திருக்க கூடாது.
மூச்சு பயிற்சிகள்:
மூச்சு பயிற்சிகள் மூக்கு அடைப்புகளைச் சரி செய்து, நல்ல சுவாசத்திற்கு வழிவகுக்கிறது. காலையில், பாஸ்த்ரிகா, பிராணயாமா போன்ற மூச்சு பயிற்சி செய்வது உடலை சமநிலையில் வைக்கும்.