Sharing is caring!

Summer food items: கோடை காலத்தில் சூரியனின் வெப்பம் நம்மை வாட்டி வதைத்து விடுகிறது. குளிர் காலத்தில் நாம் சில உணவு வகைகளை சாப்பிட்டு பழகி இருப்போம். ஆனால், வெயில் காலத்தில் உணவு விஷயத்தில் ஒருவர் அதிக கவனத்துடன் இருக்க வேண்டியது அவசியம். இல்லையென்றால், உடல் உஷ்ணம் காரணமாக பல்வேறு உடல் நலம் தொடர்பான பாதிப்புகள் ஏற்படும். எனவே, இந்த நேரத்தில் சில குறிப்பிட்ட உணவு வகைகளை எடுத்துக் கொள்வதை தவிர்ப்பது நல்லது என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். அவற்றை ஒவ்வொன்றாக நாம் இந்த பதிவின் மூலம் பார்ப்போம்.

உலர் பழங்கள்:

ஹெல்தியான டயட் முறைகளை பின்பற்றும் நபர்கள், காலை உணவாக உலர் பழங்களை எடுத்துக் கொள்வது வழக்கம். இவை உடல் எடையை குறைத்து, உடல் ஆரோக்கியத்தை பராமரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இருப்பினும், இந்த உலர் பழங்கள் உடல் வெப்பத்தை அதிகரிக்கும் தன்மை கொண்டவை. எனவே, இவற்றை கோடை காலத்தில் எடுத்துக் கொள்வது வயிற்றில் அசெளகரியத்தை உண்டாக்கும்.

டீ, காபி குடிப்பது:

கோடை காலத்தில் உடலின் வெப்பநிலை அதிகமாக இருக்கும், கூடுதலாக நாம் டீ, காபி பருகும் போது உடலில் இருக்கும் நீர்ச்சத்து குறைந்து போக வாய்ப்பு உள்ளது. எனவே, கோடை காலத்தில் அதிகமாக டீ , காபி குடிப்பதை தவிர்க்க வேண்டும். டீ, காபி பிரியர்கள் ஒருநாளைக்கு ஒரு டீ வரை பருகலாம். அதற்கு மாற்றாக, மோர், இளநீர், பதநீர் போன்ற குளிர்ச்சியான பானங்களை அருந்த பழகிக் கொள்ளுங்கள்.

எண்ணெயில் பொறித்த உணவுகள்:

எண்ணெயில் பொறித்த உணவுகள் உடலுக்கு அதிக கேடு விளைவிக்கும். குறிப்பாக, வெயில் காலத்தில் பஜ்ஜி, போண்டா, சிப்ஸ் மற்றும் வடை போன்ற உணவுகளை நிச்சயம் எடுத்துக் கொள்ள கூடாது. ஏனெனில், இதுபோன்ற உணவுகள் செரிமானம் ஆவதற்கு நீண்ட நேரம் எடுத்துக் கொள்வதால் அஜீரண கோளாறுகளை ஏற்படுத்தும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

இஞ்சி பூண்டு:

கோடை காலத்தில் இஞ்சி, பூண்டு போன்றவற்றை அளவாக எடுத்துக் கொள்ள வேண்டும். கோடையில் அளவிற்கு அதிகமாக இஞ்சி சாப்பிட்டு வந்தால், வாய்ப்புண் ஏற்படும். எனவே, உண்ணும் உணவில் இஞ்சியின் அளவை குறைத்துக் கொள்ள வேண்டும்.

மது பழக்கம்:

கோடை காலத்தில் மது பழக்கம் தலைவலி, வயிறு தொடர்பான பாதிப்புகளை ஏற்படுத்தும். எனவே, கோடை காலத்தில் மது பழக்கம் முற்றிலும் தவிர்ப்பது அவசியம்.

மேலும், கோடை காலத்தில் ஊறுகாய் மற்றும் காரமான உணவுகள் சாப்பிடுவதை தவிர்த்தல், வேண்டும். இவைகள் உடலின் நீர்ச்சத்துக்களை இழக்க செய்து அஜீரணம் தொடர்பான பாதிப்புகளை ஏற்படுத்தும்.

(Visited 62 times, 1 visits today)

Sharing is caring!