Lose weight fast: நம்மில் பலருக்கு, உடல் ஸ்லிம்மாக (பிட்டாக ) இருக்க வேண்டும் என்கின்ற ஆசை இருக்கும். இதற்காக நாம், உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள பல்வேறு முயற்சிகளை மேற்கொள்வது வழக்கம். ஆனால், ஒரு சில நாட்களுக்கு பிறகு அவற்றை மறந்து விட்டு, நம்முடைய அன்றாட வழக்கத்தை பின்பற்ற சென்று விடுவோம்.
இன்னும், சிலருக்கு என்னதான் கடினமான முயற்சிகளை மேற்கொண்டு பார்த்தாலும், வெற்றி என்பது அவ்வளவு எளிதில் கிடைக்காது. எனவே, உடல் எடையினை குறைக்க, உடற்பயிற்சி செய்வது மட்டும் போதாது, உணவு விஷயத்திலும் அதிக கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகும். எனவே, உடல் எடையினை குறைக்க முயற்சி செய்பவர்கள், சாப்பிட வேண்டிய உணவுகள் என்ன என்பதை பற்றி நாம் இந்த பதிவின் மூலம் பார்க்கலாம்.
சாப்பிட வேண்டிய உணவுகள்:
முட்டை:
எடையை குறைக்க விரும்புவோர் காலை உணவாக முட்டையைச் சாப்பிடுவது, சிறந்த தேர்வாகும். ஏனெனில், முட்டையில் இருக்கும் வைட்டமின் D உள்ளிட்ட கால்சியம் சத்துக்கள், உடலில் உள்ள கொழுப்பைக் கரைப்பது மட்டுமின்றி நம்முடைய உடல் எடையினை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
கீரை:
இரும்புச்சத்து அதிகமுள்ள கீரை உடல் எடை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. தேவைப்பட்டால், முட்டையுடன், கீரை சேர்த்துச் சாப்பிடுவது தேவையற்ற கலோரிகளை குறைப்பதுடன் அதிக அளவு ஊட்டச்சத்துக்களையும் நமக்கு வழங்கும். மேலும், கீரை சாப்பிடுவது, நீண்ட நேரம் பசியை கட்டுப்பாட்டில் வைக்க உதவுகிறது.
ஆப்பிள்:
ஆப்பிளின் வழக்கமான பயன்பாடு எடையைக் கட்டுப்படுத்த மிகவும் பயனுள்ளதாக இருக்கும். தினமும் காலையில் ஆப்பிள் ஜூஸ் சாப்பிட்டு வந்தால், இதில் இருக்கும் நார்ச்சத்து, வைட்டமின்கள் போன்றவை உடல் எடையைக் குறைக்க உதவுகின்றது.
வேர்க்கடலை:
வேர்க்கடலை, இவை உடல் எடையினை குறைக்க உதவுகிறது. ஏனெனில், இதில் மோனோ சாச்சுரேட்டட் மற்றும் பாலி அன்சாச்சுரேட்டட் கொழுப்புகள் நிரம்பியுள்ளது. மேலும், இதய நோய், டைப்-2 நீரிழிவு நோயின் அபாயத்தைக் குறைக்கிறது.
தவிர்க்க வேண்டிய உணவுகள்:
பதப்படுத்தப்பட்ட சர்க்கரை உணவுகளை தவிர்க்க வேண்டும். மேலும், பீட்சா, ரொட்டி, பேக்கரி பொருட்கள், போன்ற துரித உணவுகளை தவிர்க்க வேண்டியது அவசியமாகும். ஏனெனில், இந்த பொருட்கள் உடலில் ஆரோக்கியமற்ற கொழுப்பின் அளவை அதிகரிக்கிறது மற்றும் அதிக பசியை தூண்டிவிடும் செயலையும் செய்கிறது. மேலும், இதனை சாப்பிடுவதால் அஜீரணம், மலச்சிக்கல், டைப் 2 சர்க்கரை நோய், உடல் பருமன் போன்ற பல நோய்கள் ஏற்படுகிறது.