Milky Mistakes: தினமும் பால் குடிப்பதால், நமது உடலுக்கு தேவையான பல்வேறு ஊட்டச்சத்துக்கள் கிடைக்கிறது. குறிப்பாக, எலும்புகளை வலுப்படுத்தும் கால்சியம் சத்துக்கள் பாலில் நிறைந்துள்ளது. இது தவிர பாலில் புரோட்டீன், மாவுச்சத்து, மக்னீசியம், வைட்டமின் டி மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளது. ஆயுர்வேதத்திலும், பால் ஒரு சிறந்த மருந்து பொருளாக உள்ளது. தினமும், இரவிலும், பகலிலும் பால் குடிக்கும் போது உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். இருப்பினும், பாலுடன் சேர்த்து குறிப்பிட்ட சில உணவு பொருட்களை உட்கொள்ளும் போது உடலுக்கு பல்வேறு விளைவுகளை ஏற்படுத்துகிறது. இதனால், நமக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு, செரிமானம் தொடர்பான பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படும். எனவே, பாலுடன் சேர்த்து சாப்பிட கூடாத சில உணவு பொருட்கள் பற்றி நாம் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.
பாலுடன், மீன்:
பால் சார்ந்த பொருட்களை சாப்பிட்ட பிறகு, அசைவ உணவு வகையான மீன் சாப்பிடுவது நல்லது கிடையாது. இது செரிமானத்தில் பாதிப்பை ஏற்படுத்தும். இதனால், உங்களுக்கு மலச்சிக்கல், வயிற்று போக்கு போன்றவை ஏற்படும். மேலும், சருமத்தில் அலர்ஜியை ஏற்படுத்தும்.
பாலுடன், முட்டை:
பால், முட்டை ஆகிய இரண்டுமே புரதம் நிறைந்த உணவுப்பொருட்கள் ஆகும். இரண்டையும் ஒன்றாக சேர்த்து சாப்பிடும் போது, அஜீரணக் கோளாறுகளை ஏற்படுத்தும்.
பாலுடன், வாழைப்பழம்:
திருமணத்திற்கு பிறகு முதல் இரவில் பாலுடன் சேர்த்து வாழைப்பழம் சாப்பிடும் பழக்கத்தை நாம் வழிவழியாக, பின்பற்றி வருகிறோம். இருப்பினும், இவை அளவிற்கு அதிகமாக உட்கொள்ளும் பட்சத்தில், உடலில் அஜீரண கோளாறுகளை ஏற்படுத்தும். மேலும், சளி பிரச்சனையை ஏற்படுத்தும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
பாலுடன், எலுமிச்சை போன்ற சிட்ரஸ் பழங்கள்:
பொதுவாக சிட்ரஸ் பழங்கள் திரியும் தன்மை கொண்டது. இதனை பாலுடன் சேர்த்து உட்கொள்ளும் போது வயிற்றில், அசிடிட்டியை ஏற்படுத்தும். எனவே, பால் குடித்த பிறகு குறைந்தது 2 மணிநேரம் இடைவெளிக்கு பிறகு மேற்கூறிய உணவு வகைகளை உட்கொள்ள பரிந்துரைக்கப்படுகிறது.
பாலுடன், வெல்லம்:
பாலுடன், வெல்லம் சேர்த்து சாப்பிட கூடாது. ஏனெனில், பால் அதிக குளிர்ச்சியை தரக்கூடியது. அதேபோல், வெல்லம் சூட்டை கிளப்பிவிடும். எனவே, எதிரெதிர் பண்புகளை கொண்ட இந்த இரண்டையும் சேர்த்து உட்கொள்ளக் கூடாது.