Washing chicken Tips: நம்முடைய முன்னோர்கள் காலத்தில் எல்லாம் திருவிழா போன்ற பண்டிகை காலங்களில் வீட்டில் வளர்க்கப்படும் ஆடு, கோழி போன்றவற்றை வெட்டி (நான் வெஜ்) சமைத்து, உற்றார் உறவினர்களுக்கு கொடுத்து உண்டு மகிழ்ந்தனர். இன்று நாம் மேற்கத்திய கலாசாரத்தை பின்பற்றி வாழ்ந்து வருகிறோம். இன்று நம்மில் பலர் நான் வெஜ் பிரியர்கள், பிரியாணி பிரியர்களாக இருக்கிறோம். இதனால், வாரத்தில் இரண்டு முறையாவது இறைச்சி உண்ணும் பழக்கம் இருக்கும்.
இதனால், கோழி இறைச்சி பிரியர்கள் மத்தியில் சிக்கன் பயன்பாடு அதிகரித்து காணப்படுகிறது. இவை நீண்ட நாட்கள் கெட்டு போகாமல் இருக்க, மருந்துகள் ஊசிகள் போடப்பட்டு பாதுகாக்கப்படுகிறது. இதனால், இவற்றை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வது ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும். அத்துடன் இவற்றை கழுவும் போதும் பாதுகாப்பாக கையாள வேண்டும் என்று சமீபத்திய ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக, ஆஸ்திரேலியாவின் உணவு பாதுகாப்பு கவுன்சில் நடத்திய ஆய்வில், கோழி இறைச்சியை ஓடும் குழாய் நீரில் ( குழாயினை திறந்து விட்டு) கழுவினால் ஆபத்தான பாக்டீரியாக்கள் சமையல் அறையில் பரவும் என்று தெரியவந்துள்ளது.
ஏனெனில், உணவில் பரவும் நோய்க்கான இரண்டு முக்கிய காரணங்கள் கேம்பிலோ பாக்டர் மற்றும் சல்மோனெல்லா பாக்டீரியா ஆகும். இவை பச்சை கோழிகளில் அதிகம் காணப்படுகிறது.
எனவே, கோழி இறைச்சியை ஓடும் குழாய் நீரில் கழுவும் போது, கைகளில் தெறிக்கும் தண்ணீர் மூலம் பல்வேறு நோய்கள் பரவுவதற்கு வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். கடந்த 20 ஆண்டுகளில் ஆஸ்திரேலியாவில் இதுபோன்ற நோய் தொற்று இருமடங்கு அதிகரித்துள்ளதாம். இருப்பினும், கோழி இறைச்சியின் மலத்தை கழுவினால் மட்டுமே, இறைச்சி சுத்தம் ஆகும் என்று பலர் நம்புகின்றனர். எனவே, இனிமேல் ஒரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி அதில் கோழி இறைச்சியை போட்டு கழுவுவது நல்லது என்று மருத்துவ வல்லுநர்களால் பரிந்துரைக்கப்படுகிறது.