
Summer food tips: வெயில் காலம் ஆரம்பித்து விட்டாலே, சுட்டெரிக்கும் சூரியனின் வெப்பம் பகல் நேரத்தில் நம்மை வாட்டி வதைத்துவிடும். எனவே, கோடையில் உடல் உஷ்ணம் இல்லாமல் உடலை அதிக குளிர்ச்சியாகவும், நீரோட்டமாகவும் வைத்திருக்க வேண்டியது அவசியம். இதற்காக நாம் தினமும் உடல் சூட்டினை அதிகரிக்கும் உணவுகளை தவிர்த்து, ஆரோக்கியமான நீர்ச்சத்துள்ள உணவுகளை உட்கொள்ள வேண்டியது அவசியம். அந்த வரிசையில், வெள்ளை பூசணியின் சாறு முக்கிய பங்கு வகிக்கிறது. இதில் நிறைந்துள்ள கால்சியம், பொட்டாசியம் மற்றும் நார்ச்சத்து வெயில் காலத்தில் உடலை குளிர்ச்சியாகவும், நீரோட்டமாகவும் வைத்திருக்க செய்கிறது. மேலும், உடல் எடையை குறைப்பது மட்டுமின்றி, வயிறு தொடர்பான கோளாறுகள் ஏற்படாமல் நம்மை பாதுகாக்கிறது.

வெள்ளை பூசணியில் இருக்கும் நார்ச்சத்து, உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
தினமும் காலையில் வெறும் வயிற்றில் வெள்ளை பூசணி சாறுடன் தேன் கலந்து குடித்து வந்தால், அஜீரணம் தொடர்பான பாதிப்புகள் ஏற்படாமல் பாதுகாக்கும். மேலும், இது உடல் எடையை குறைப்பதுடன் உடலில் சேர்ந்துள்ள கெட்ட கொலஸ்ட்ரால் அளவை குறைக்கும் தன்மை கொண்டது.

வெள்ளை பூசணி சாறு சிறுநீரகம் நன்றாக செயல்பட உதவுகிறது. இரத்தம் கலந்த சிறுநீர் வெளியேற்றம், பைல்ஸ், சிறுநீரக தொற்று போன்றவற்றிற்கு வெள்ளை பூசணி சாறு நல்ல பலன் தரும்.
சுரைக்காயில் அதிக அளவில் நீர் சத்துக்கள் நிறைந்துள்ளது. இது செரிமான அமைப்பை சீராக்குவதுடன், கண் கோளாறுகளை சரிசெய்யும்.

கோடை காலத்தில் தக்காளி மிகவும் சிறந்த உணவு பொருளாகும். தக்காளியில் நிறைந்துள்ள லைகோபீன் புற்றுநோய்க்கு எதிராக செயல்படுகிறது. மேலும், வெள்ளரிக்காய், கோஸ், கேரட் போன்ற உணவுகளிலும் நீர்ச்சத்து அதிக அளவில் நிறைந்துள்ளது.

அதேபோன்று, வெயில் காலத்தில் சாதாரண தண்ணீருக்கு பதிலாக வெந்தயம் அல்லது சீரகம் ஊற வைத்த தண்ணீர் குடிப்பது நல்லது. இது உடலுக்கு அதிக குளிர்ச்சியை தரும். மேலும், கோடை காலத்தில் ஒருவர் 4 முதல் 5 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். அத்துடன் ஒரு நாளைக்கு, இரண்டு முறை குளிக்க வேண்டும்.