
Summer Tips: வெயில் காலத்தில் உடல் சூடு அதிகமாக இருக்கும். அதிக உடல் உஷ்ணம் காரணமாக மயக்கம், பித்தம், சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல், மலச்சிக்கல், அஜீரண கோளாறு போன்ற பாதிப்புகள் ஏற்படும். இன்னும், ஒரு மாத காலத்திற்கு வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் உடலை எப்போதும் குளிர்ச்சியாக வைத்திருக்க வேண்டியது அவசியம். இதற்காக நாம், இளநீர், நுங்கு, பழங்கள், போன்ற குளிர்ச்சியான பானங்கள் எடுத்துக் கொள்வோம். முக்கியமாக நாம் வெயில் காலத்தில், அடிக்கடி தயிர், மோர் உட்கொள்வோம். ஆனால், இரண்டில் எது சிறந்தது என்பது உங்களுக்கு தெரியுமா..? அதற்கான விளக்கத்தை நாம் இந்த பதிவின் மூலம் தெரிந்து வைத்துக் கொள்வோம்.

தயிர் மதிய உணவின் போது அதிகமாக எடுத்துக் கொள்ளப்படுகிறது. இது உடலை குளிர்ச்சியாக வைத்திருக்கும். ஆனால், தயிரில் இருந்து தயாரிக்கப்படும் மோர் தயிரை காட்டிலும் உடலை குளிர்ச்சியாக வைத்திருக்கும் என்கின்றனர் மருத்துவ வல்லுநர்கள். அதுமட்டுமின்றி, பல்வேறு ஆரோக்கிய நன்மைகளும் இதில் நிறைந்துள்ளது.

தயிர், மோர் ஆகிய இரண்டிலுமே குடலை ஆரோக்கியமாக வைத்திருக்கும் புரோபயாடிக் நிறைந்துள்ளது. அதுமட்டுமின்றி, மோர், தயிரை விட செரிமானத்திற்கு சிறந்தது. உடல் வெப்பநிலையை குறைத்து உடலை எப்போதும் குளிர்ச்சியாக வைத்திருக்கும். வெயில் காலத்தில் மோர் பானம் சாலை ஓர பந்தல்களில் வைக்கப்பட்டிருக்கும்.

எனவே, உணவிற்கு பிறகு ஒரு கப் மோர் குடிப்பது நல்லது. அதேபோல், உணவில் நீங்கள் தயிர் சேர்த்துக் கொள்ளும் போது கூடுதல் அளவு தண்ணீர் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதில் நிறைந்துள்ள கால்சியம் மற்றும் நார்ச்சத்துக்கள் உடல் எடையை குறைத்து ஆரோக்கியமாக வைக்க உதவும். வெயில் காலங்களில் சிறுநீர் மஞ்சளாக அதிக எரிச்சலுடன் இருந்தால், மோரில் உப்பு போட்டு கலக்கி குடிக்க வேண்டும். காரமான உணவுகளை உட்கொண்ட பிறகு வயிற்றில் ஏற்படும் எரிச்சலை குறைக்கும் மிகச்சிறந்த கோடைகால பானமாக தயிர் இருந்து வருகிறது.